Wednesday, February 7, 2018

Invitation for Mahashivratri 2018


*மகா சிவராத்திரி ரகசியம்*

🌿 *மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் !!!*🌿

'எம தூதர்களே! அந்தணனாகிய இந்தச் சுகுமாறனை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள். இவனை நாங்கள் கைலாயத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்' என்றார்கள்.

'சிவகணங்களே ! இந்தப் பாவாத்மாவானவன் எங்களைச் சேரவேண்டியவன். பூலோகத்தில் செய்த பாவங்களுக்காக நரகத்தில் இவன் பலகாலம் வதைபட வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க, நீங்கள் எதற்காக இவனைக் கேட்கிறீர்கள் ? இவனை நாங்கள் தரமாட்டோம்' - கிங்கரர்கள் கோபத்துடன் மறுத்தார்கள்.

"கிங்கரர்களே ! இவனை அழைத்து வரும்படி கைலாசநாதனான பரமேஸ்வரன் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். எனவே, மறுக்காமல் இவனைத் தந்து விட்டுப் புறப்படுங்கள். வீணாக எங்களின் கோபத்தைத் துண்டாதீர்கள்” - மிரட்டினார்கள் சிவகணங்கள்.

'சிவகணங்களே! நீங்கள் சொல்வது நியாயமல்ல. எமலோகத்தின் அதிபதியான எமராஜன் இவனை நரகத்தில் கொண்டுவிடச் சொல்லித்தான் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதை எங்களால் மீற முடியாது' என்ற கிங்கரர்கள், சுகுமாறனை பாசக்கயிரால் கட்டி இழுத்துச் செல்ல முனைந்தார்கள்.

இதைக்கண்ட சிவகணங்கள் ருத்ரனின் பெயரை உச்சரித்தபடி, அம்புகளால் எம் தூதர்களைத் தாக்கி அவர்களைத் துரத்திவிட்டு சுகுமாறனை கட்டுகளிலிருந்து விடுவித்துக் கைலாயத்துக்கு அழைத்துச் சென்றனர். சுகுமாறன், அங்கே பனிமலை நாயகனான சிவபெருமானைத் தரிசித்து அவரின் அருட்பார்வையின் பலனால் அப்போதே மோட்சம் பெற்றான்.

இந்த மேற்படி சம்பவம்தான் எமனுக்குக் கோபத்தைத் தூண்டி, விரக்திகொள்ள வைத்துவிட்டது.

எமனுக்கு இன்னும் கூட சந்தேகம் தீரவில்லை.

'சித்ரகுப்தா ! ஒருவேளை நாம்தான் ஏதாவது தவறு செய்து விட்டோமோ ? எதற்கும், மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துச் சொல். அந்தச் சுகுமாறன் கொஞ்ச நஞ்சமாவது ஏதேனும் புண்ணியம் செய்திருக்கிறானோ?

சித்ரகுப்தன் சுவடிகளை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் திட்ட வட்டமாகச் சொன்னான்.

'இல்லை பிரபு ! அந்தக் கொடியவன், பிறந்தது முதல் இன்று வரை தீமைகளை மட்டும்தான் செய்து வந்திருக்கிறானே தவிர, மறந்தும்கூட அவன் புண்ணியம் செய்ததில்லை.

எமனுக்குள் ஆத்திரம் அலைமோதியது.

'வாருங்கள் ! இப்போதே புறப்பட்டுக் கைலாயம் செல்வோம். சிவபெருமானையே நேரில் சந்தித்து நியாயம் கேட்போம்' என்றவன் தனது வாகனமான எருமைக்கடாவின் மீதேறி, சித்ரகுப்தனும் இன்னும் சில எம தூதர்களும் புடைசூழ முக்கண்ணனின் இருப்பிடத்துக்குப் புறப்பட்டனர்.

பனிமலையாகிய கைலாயத்தில் பரமேஸ்வரன், உமாதேவியுடன் அமர்ந்திருந்தார். விநாயகனும் முருகனும் அருகிலிருக்க, இன்னும் நந்தி தேவரும் தேவரிஷிகளும் சிவகணங்களும் சூழ்ந்திருந்தனர்.

எமன், சிவபெருமானின் சந்நிதியை நெருங்கிப் பணிவுடன் வணங்கினான். பின் தன் பாசம், தண்டம், முத்திரை முதலிய விருதுகளை இறைவனின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, 'இறைவா ! பரம்பொருளே பரமேஸ்வரா ! அடியேன், எமலோகத்தின் அதிபதியாகிய பதவியிலிருந்து விலகிக்கொள்ள தயவுசெய்து கருணை காட்டவேண்டும்' என்று வேண்டினான்.

மகாதேவன் மெல்லிய புன்முறுவலுடன் கேட்டார்!

'தர்மராஜனே ! எதற்காக இந்தத் திடீர் முடிவு ? என்ன உன் குறை ?"

'சிவபெருமானே ! தேவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலென்று தாங்கள்தான் பிரித்து நியமித்தீர்கள். அதன்படியே அனைவரும் அவரவர் பணிகளை எந்தக் குறையுமில்லாமல் செய்து வருகிறார்கள்.

எனக்கு எமலோகப் பதவியளித்து, மூவுலகங்களிலும் உள்ள உயிர்கள் செய்யும் தீவினைகளை அறிந்து அவற்றுக்குத் தகுந்தபடி தண்டனைகள் அளிக்குமாறு கட்டளையிட்டிருந்தீர்கள். நானும் இதுநாள் வரை அதன் படியே என் கடமையை, தவறாமல் நிறைவேற்றி வந்தேன்.

அப்படியிருக்க, பூலோகவாசியான சுகுமாறன் என்னும் பாவியை அவன் செய்த தீவினைகளுக்கு ஏற்ப என்னால் தண்டிக்கமுடியாமல் தடை ஏற்பட்டுவிட்டது. அதைச் செய்தவர்கள் தங்களின் சிவகணங்கள் தான்.

அவர்கள் என்னுடைய எம தூதர்களைத் தாக்கித் துரத்தி விட்டு சுகுமாறனை விடுவித்துக் கொண்டார்கள். அவனைத் தங்கத் தேரிலேற்றி, பெரும் புண்ணியசீலர்களும் மகாதவசிகளும் மட்டுமே பாக்கியம் பெறக் கூடிய தங்களின் பாதக் கமலங்களில் கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டார்கள்.

சுகுமாறன் என்னும் அந்த அந்தணன் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை. அவன் தங்களைத் தரிசித்து மோட்சமடையும் பாக்கியம் பெற்றானென்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது மகாதேவா ? அந்தக் கொடிய பாவியைத் தண்டிக்க முடியாமல் கடமையிலிருந்து தவறிய நான், இனி எமப் பதவியில் இருந்து தான் பயனென்ன பெருமானே ? - புலம்பலுடன் தனது குறையைச் சொல்லி முடித் தான் எமராஜன்.

'எமனே ! நடந்தது குறித்து வருந்தாதே. ஒருவன் எத்தனை தான் கொடிய பாவங்கள் செய்திருந்த பாவியானாலும், அவன் ஒரு சிவராத்திரி விரதமிருந்து அன்றிரவு நான்கு சாமத்திலும் எம்மைப் பூஜித்தால், அவன் செய்த அத்தனை தீவினைகளும் தீப்பொறி பட்ட பஞ்சுப்பொதிபோலப் பொசுங்கிப் போய்விடும் என்பது உனக்குத் தெரியாதா ?

அப்படிப்பட்ட ஓர் சிவராத்திரியில் நாகேசுவரத் தலத்தில், என்னையும் உமாதேவியையும் தரிசித்ததாலேயே அந்தச் சுகுமாறன் தனது தீவினைகள் நீங்கப் பெற்று மோட்சம் பெற்றான். இப்போது காரணம் புரிந்ததல்லவா ?

சிவபெருமான் விளக்கம் சொன்ன பிறகும், எமதர்மனின் மனம் சமாதானம் அடையவில்லை.

‘மகாதேவா ! அவன் உங்களை அன்போடு பூஜித்தவனில்லை. குடிவெறி கொண்டவனாகக் கள்ளைக் குடித்துவிட்டுப் போதையுடனேயே கோயிலுக்குள் நுழைந்தவன். அவன் தனது மனைவிகளின் கூந்தலில் சூட்டுவதற்காக நந்தவனத்தில் மலர்களைத் திருட வந்தானே தவிர, பக்தியுடனோ பரவசத்துடனோ சிவராத்திரி விரதமிருக்கும் விருப்பத்துடனோ அவன் அந்த ஆலயத்துக்கு வரவில்லை' - பதற்றத்துடன் கூறினான் எமதர்மன்.

மகேஸ்வரன் மலர்ச்சியுடன் சிரித்தார்.

'எமதர்மனே ! என்மீது எள்ளளவு பக்தியோ பாசமோ அன்போ இல்லாதவர்கள் என்றாலும் கூட, சிவராத்திரி அன்று எம்மைக் கண்டாலும் பூஜித்தாலும் அவர் நற்கதி பெறுவது நிச்சயம் ! எனவே, சிவராத்திரி தரிசனம் கண்ட எவரானாலும் அவர் எம் தொண்டர் என்றே மதித்து, கோரரூபத்தோடு அவர்மீது பாசம் வீசுவதையும் தண்டத்தால் வதைப்பதையும் விட்டு விடு' என்று உத்தரவிட்டார்.

சிவராத்திரியின் மகிமையை நன்கு உணர்ந்து கொண்டவனாக, மனமகிழ்ச்சியுடன் எமலோகம் திரும்பினான் எமதர்மன்.

சுகுமாறனின் கதையைச் சொல்லிமுடித்த ஸுதர் மகரிஷி, முனிவர்களிடம் மேலும் கூறினார்:

'பரமேஸ்வரனுக்குரிய சிறந்த விரதம் எது வென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே ! வேதாக மங்கள் போற்றிப் புகழும் சிறந்த விரதம் சிவராத்திரி விரதம் தான் !

வேதங்களில் சாம வேதமும், யாகங்களில் அசுவமேத யாகமும், மலைகளில் மகா மேருவும், நதிகளில் கங்கையும், பஞ்ச பூதங்களில் ஆகாயமும், தேவர்களில் இந்திரனும் முதன்மை பெற்றிருப்பதைப்போல, சிவபெருமானுக்குரிய விரதங்களில் முதன்மையும் சிறப்பும் பெற்று விளங்குவது சிவராத்திரி விரதமாகும்.

அன்று சிவராத்திரியென்றும், பரமேஸ்வரனைத் தரிசிக்க வேண்டுமென்று எந்த நினைப்பும் இல்லாமல் பூக்கள் திருடப் போன மகாபாவிதான் சுகுமாறன். அப்படிப் பட்டவனே சிவராத்திரி சிவதரிசனத்தால் மோட்சம் பெற்றான் என்றால், சிவ ராத்திரியின் மகிமையை உணர்ந்து விரதமிருந்து அந்த மகாதேவனைப் பூஜித்தால் எத்தனை பெரிய புண்ணியம் கிட்டும் என் பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

"மகரிஷி இத்தனை பெருமைமிக்க சிவராத்திரி எப்படி ஏற்பட்டது ? அதன் வரலாறு என்ன ?' - ஆர்வத்துடன் கேட்டார்கள் ரிஷிகள்.

'சிவசக்தியாகிய பார்வதி தேவியின் அன்பினாலேயே சிவராத்திரியின் வரலாறு தொடங்கியது. ஒருமுறை கற்பகக்கால பிரளயம் உண்டாகி, எல்லா உலகங்களும் மற்றும் பிரம்மனும் அழிந்து பிரளயத்தில் உயிர்கள் அனைத்தும் மூழ்கிச்சொத்து மடிந்திருந்தன.

நிர்மலமான அந்த இரவின் முடிவில், உமா தேவி தனித்து அமர்ந்திருந்தாள். பிரளய இரவின் நான்கு சாமத்திலும், பொன்னிறம் கொண்ட கொன்றைமாலையை அணிந்த பரமேஸ்வரனை ஆகம விதிப்படி அர்ச்சனை செய்து அவனையே மனத்தில் நினைத்துத் துதித்திருந்தாள். சாமத்தின் முடிவில் பார்வதி தேவியின் முன் தோன்றினார் சிவபெருமான்.

'பார்வதி ! இரவின் நான்கு சாமத்திலும் இடைவிடாமல் எம்மையே துதித்திருந்த உன் அன்பு, என் உள்ளத்தை நெகிழவைத்துவிட்டது. என்ன வேண்டும் கேள் ?’ என்று கேட்டார்.

'இறைவா ! பகல்பொழுது தங்களுக்கும் இரவுப்பொழுது எனக்கும் உரியது என்பது நியதி. ஆனால், நான் தங்களைப் பூஜித்த இந்த இரவை, உலகத்தில் உள்ளோரும் மற்றும் தேவர்களும் தங்கள் பெயராலேயே 'சிவராத்திரி’ என்று போற்றிக் கொண்டாடவேண்டும்.

புனிதமான இந்தச் சிவராத்திரியில், யாராயிருந்தாலும் சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமித்தது முதல் கீழ்த் திசையில் உதிக்கும் வரை தங்களைப் பூஜித்தால், அவர்களுக்கு சொர்க்க போகங்களையும் முடிவில் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையும் தாங்கள் அளிக்கவேண்டும்' என்று பிரார்த்தித்தாள்.

பரமசிவனும் அப்படியே அனுக்கிரகம் செய்ய, அந்த இரவு 'சிவராத்திரி’ என எல்லோராலும் கொண்டாடும் விரதமாகியது.

அதுமட்டுமில்லாமல், இந்தச்சிவராத்திரி மேலும் மகிமை பெறும்விதமாக மற்றொரு மகோன்னத சம்பவமும் நடந்தது. சண்டையும் சச்சரவுமாகத் தொடங்கிய நிகழ்வு அது !"

'அப்படியா ? என்ன சண்டை ? யாருக்குள் நடந்தது ? எதற்காக நடந்தது ?’ - வியப்புடன் கேட்டார்கள் ரிஷிகள்.

ஸூதர் மகரிஷி மெல்லச் சிரித்தார்.

‘இரு பெரும் கடவுள்களுக்கிடையே நடந்த சண்டை அது. அதன் முடிவு சிவராத்திரியின் மகத்துவத்தை உலகுக்கே விளக்கியது. சொல்கிறேன் கேளுங்கள்' என்ற வர், கடவுள்களின் மோதலைப்பற்றிக்கூறத் தொடங்கினார்.

*இன்னும் வளரும்...*

 🙏🏽 *தியான நிலையில் ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை ஓதினால ஐம்புலன்களையும் அடக்கலாம்.*🙏🏽

Sources: ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர்,திருக்காஞ்சி முகநூல் பக்கம்